பி.கு. செண்பகம், பிரம்மா குமாரிகள், மதுரை
வியாபாரி ஒருவன் கடை தெருவில் ஒரு விசித்திரமான அறிவிப்பு பலகையை பார்த்தார். அதில் குறிப்பிட்டிருந்தது இங்கு “ஒரு பொன்மொழிக்கு 200 பொன்”. அதாவது 200 பொன் கொடுத்து ஒரு பொன்மொழியை கேட்டுக்கொள்ளலாம். வியாபாரிக்கு அதுபற்றி அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. உள்ளே சென்று விசாரித்தார். 200 பொன் கொடுத்தால் தான் கூறப்படும் என்றார்கள். அந்த நேரத்தில் அவருக்குள்ளே ஆர்வம் அதிகமாக இருந்ததால் 200 பொன் பெரிதாக தெரியவில்லை. ஆகையினால் 200 பொன் கொடுத்து பொன்மொழி என்ன என்று கேட்டறிந்தார். அவருக்கான பொன்மொழி
“அன்றைய காரியங்களை அன்றே செய்து முடிக்க வேண்டும் மறுநாள் தள்ளிப்போடக் கூடாது”
என்று எழுதப்பட்டிருந்தது. இதைக் கேட்டபின் வியாபாரிக்கு இது தெரிந்த பொன்மொழி தானே இதற்காக 200 பொன் கொடுத்து ஏமாந்து விட்டோமே என்று தோன்றியது. ஏனெனில் அந்த பொன்மொழி அப்பொது மிக மதிப்புடையதாக அவருக்குத் தோன்றவில்லை.
அன்று மாலை துறைமுகத்தில் அவருக்கான வியாபார சரக்குகள் கப்பலில் வந்தது. வேலையாட்கள் சரக்குகளை இறக்கி வைத்ததில் களைப்படைந்து விட்டனர். நாளைக் காலை வந்து குடோனில் சேர்க்கிறோம் என்றனர். சரக்குகளை தார்பாய் கொண்டு முடிவிட்டனர். ஆகவே வியாபாரிகள் அனைவரும் மறுநாள் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டு அங்கேயே சரக்குகளை விட்டுச்சொல்ல முடிவு செய்தனர். இவரும் முதலில் ஏற்றுக் கொண்டார். பிறகு 200 பொன் கொடுத்து கேட்ட பொன்மொழியை நடைமுறைப்படுத்தும் எண்ணம் வந்தது. அதுவே வெளியிலிருந்து கூலி ஆட்களை வரவழைத்து குடோனில் அன்று இரவே சரக்குகளை கொண்டு சேர்த்து விட்டார். மறுநாள் அங்கு வந்த அனைவருக்கும் அதிர்ச்சியாயிருந்தது. இரவு திடீர் மழை புயல் அனைவரது சரக்குகளும் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது இந்த வியாபாரியின் சரக்குகள் பத்திரமாக குடோனில் இருந்து. பல லட்ச மதிப்புள்ள சரக்குகள் காப்பாற்றப்பட்டது. ஒரு பொன்மொழியை அன்றைய நாள் அவர் நடைமுறைப்படுத்தியதில் அவருக்கு மிகப் பெரிய லாபம் கிடைத்தது.
கருத்து:
இறைவன் அனைத்து ஆத்மாக்களுக்குக் கூறும் ஒவ்வோரு மகாவாக்கியமும் ஞான இரத்தினங்கள் மதிப்பிட முடியாதவை. ஒவ்வொன்றையும் நாம் நடைமுறைப்படுத்தும் போது அடுத்த 5000 வருடங்களுக்கான வருமானம் சேமிப்பாகிவிடும்.